20 கோடி கொரோனா தடுப்பூசிகளை 130 நாளில் செலுத்தி இந்தியா சாதனை -சுகாதாரத்துறை அமைச்சகம்
130 நாட்களில் 20 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானவர்கள் நாடு முழுவதும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர்.
எனவே கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதியே 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிய நிலையில், மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதி கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். 130 நாட்களில் 20 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்திய சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 130 நாளில் 20 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் 20 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியுள்ள நாடு எனவும், அமெரிக்காவுக்கு 20 கோடி தடுப்பூசி போட 124 நாட்கள் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 42 சதவீத மக்கள் இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தான் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுவரை 15.71 கோடி பேர் முதல் தவணையும், 4.35 கோடி பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் எடுத்துக்கொண்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.