இந்தியாவின் சுதந்திர தினம் – வரலாறு..!
ஆகஸ்ட் 15 ஆம் தேதி என்று சொன்னாலே, சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள நம் நாட்டு மக்களுக்கு முதலில் நினைவுக்கு ‘இந்தியாவின் சுதந்திர தினம்’ தான். ஏனெனில்,பல புரட்சியாளர்களின் போராட்டத்தாலும்,பலரது உயிர் தியாகத்தாலும் 1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது.
நாட்டிற்காக போராடிய மற்றும் உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறவும் மற்றும் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்களிடம் அடிமைப் பட்டிருந்த நம் நாடு விடுதலை அடைந்ததை கொண்டாடும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்த வரலாற்று நிகழ்வுகளை காண்போம்:
தொடக்க கால இந்தியா:
மூன்று பக்கமும் கடலாலும்,ஒரு பக்கம் நிலப்பகுதியாலும் சூழப்பட்டதனால் ‘தீப கற்பம்’ என்றழைக்கப்படும் நமது நாடானது, மேற்கே பாகிஸ்தான், கிழக்கே வங்காளதேசம்,தெற்கே கன்னியாக்குமரி எனப் பெருவாரியானப் நிலப்பரப்பளவைக் கொண்ட நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் நம் நாடு மிகவும் செழிப்பாகவும், பசுமையாகவும் செல்வ செழிப்பில் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தது.
அந்த சமயத்தில், தென்னிந்தியாவை சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, தில்லி சுல்தானகம், தக்காணத்து சுல்தானகங்கள், விஜயநகரப் பேரரசு, முகலாயப் பேரரசு, மராட்டியப் பேரரசு, சீக்கியப் பேரரசு எனப் பலரும் நமது நாட்டின் எல்லைகளையும், செல்வங்களையும் விரிவுபடுத்தி ஆண்டு வந்தனர்.
பிறநாட்டவர்களின் வருகை:
இதற்கிடையில், விஜயநகரப் பேரரசு காலத்தில், வாஸ்கோடகாமா என்ற போர்ச்சுகீசிய மாலுமி மே-27-1498 ஆம் ஆண்டு நன்னம்பிக்கை முனை என்ற பகுதியை கடந்து இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள கள்ளிகோட்டையை அடைந்தார்.
‘வந்தோரை வாழவைக்கும் நாடெங்கள் நாடு’ என்ற பெருமை நமது இந்தியா நாட்டிற்கு எப்போதும் உள்ளது. அதற்கேற்ப, அப்போதைய கள்ளிகோட்டை மன்னரான சாமரின் என்பவர் போர்ச்சுகீசியர்கள் வாணிபம் செய்ய அனுமதி அளித்தார். கள்ளிகோட்டை,கண்ணனூர்,கொச்சி ஆகிய இடங்களில் போர்ச்சுகீசியர்கள் வாணிக நிலையங்களை நிறுவி வணிகம் மேற்கொண்டனர். இவர்களை தொடர்ந்து, டச்சுக்காரர்கள் 1602 ஆம் ஆண்டு டச்சு கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கி, இந்தியாவில் மசூலிப்பட்டினம், புலிகாட்,சூரத், காரைக்கால், நாகப்பட்டினம், கசிம்பசார் ஆகிய இடங்களில் வணிக மையங்களை நிறுவினர் .
அதன் பின்னர், 1613 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் சூரத்தில் வணிக நிலையத்தை நிறுவினர். அப்போது முதல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி 1858 -வரை இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதற்கிடையில்,பிரெஞ்சுகாரர்கள் வந்தனர். ஆனால், அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே போட்டி நிலவியது. இது இந்தியாவில் கர்நாடக போர்களாக மாறின. இறுதியில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். பிரெஞ்சுக்காரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர்.
ஆங்கிலேயர்களின்(பிரிட்டிஷ்) ஆதிக்கம்:
இதனையடுத்து, இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலேயர்கள் தங்களது கிழக்கிந்திய கம்பெனியை நிறுவினர். இதனால், இந்தியா முழுவதும் ஆங்கிலேயரின் ஆட்சிக்குள் வர வரிகள், நிலங்கள் கையகப்படுத்துதல், போன்றவற்றால் இந்தியா பஞ்சம் வரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது.
ஆங்கிலேயர்கள் என்னதான் தனது ஆதிக்கத்தை மேலோங்கச் செய்தாலும், நமது இந்தியர்கள் பல போராட்டங்களிலும், கிளர்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டே இருந்தனர். இதன் விளைவாக 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை:
இதற்கிடையில், 1919ல், அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக்கில் கூடியிருந்த நிராயுதபாணியான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரையும் சுடுமாறு பிரிட்டிஷ் ராணுவத் தளபதியான ஜெனரல் ரெஜினால்ட் டயர் உத்தரவிட்டார். இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து,1920 ஆம் ஆண்டில், கிலாபாத், ஒத்துழையாமை இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் போன்றவைகள் தோன்றின. इस लिंक की जाँच करें
காந்தியடிகள்:
பின்னர், நாட்டில் நிலவிய சூழலைத் தடுக்க மகாத்மா காந்தி அவர்கள், சத்தியாகிரகம் இயக்கத்தைத் தொடங்கி, ஆங்கிலேயர்களை எதிர்த்தார். இதனால், காந்திக்கு 1922 ஆம் ஆண்டு ஆறுவருட சிறைதண்டனை விதிக்கப்பட்டு, இரண்டாண்டுகளிலேயே விடுதலையும் செய்யப்பட்டது. 1929 ல், டெல்லி பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசினார். இதை மிகவும் கடுமையாக எதிர்த்த காந்தியடிகள், அமைதியால் மட்டும் சுதந்திரம் அடைய முடியுமென்று தெரிவித்தார்.
உப்பு சத்தியாகிரம்.
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், அதை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘எங்களுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கூறி, அகிம்சை முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். அதன்பின்னர், உப்பு மீதான வரியை ஆங்கிலேய அரசு ரத்து செய்தது.
நேதாஜியின் ராணுவம்:
1943 ஆம் ஆண்டில், நேதாஜி அவர்கள் இந்திய தேசிய ராணுவத்தை தென்கிழக்காசியாவில் நாடுகடத்தப்பட்ட இந்திய தேசபக்தர்களையும் ஜப்பான் உதவியுடன் உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார்.
போராட்டம் தீவிரம்:
இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் சுதந்திர போராட்டம் மிகவும் தீவிரமானது. இந்த சமயத்தில் இரண்டாம் உலகப்போரும் ஏற்பட ஆங்கிலேய அரசின் பொருளாதாரம் வெகுவாக குறைந்து, சொந்த நாட்டையே நிர்வகிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் 1945ல் நடைபெற்ற பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்ததது. இதற்கு முக்கிய காரணம், தனது தேர்தல் வாக்குறுதியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.
இத்தகைய காரணங்களாலும்,பல தலைவர்கள் மற்றும் மக்கள் நடத்திய போராட்டங்களையும் கருத்தில் கொண்டு 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது.
தனி நாடு:
இந்தநிலையில் தான் 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் கடைசி வைஸிராயாக மவுண்ட் பேட்டன் பொறுப்பேற்றார். இவர் உடனடியாக நேரு, ஜின்னா உள்ளிட்ட தலைவர்களிடம் தொடர் பேச்சுகள் நடத்தினார். ஆனால் ,ஜின்னா முஸ்லீம்களுக்கு தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தார்.
சுதந்திரம்:
இதனால், ஜூன் 3 ஆம் தேதியன்று இந்தியப் பேரரசை ‘மதச்சார்பற்ற இந்தியா’ என்றும், முஸ்லீம்களுக்கென்று பாகிஸ்தானை பிரித்தளிப்பதாகவும் மவுண்ட் பேட்டன் அறிவி்த்தார். இதன்காரணமாக,1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 14 ஆம் தேதி பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து சென்றது. இந்தியாவுக்கு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பதவியேற்றனர். இதன்காரணமாக, ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.