இந்தியாவின் முதல் சர்வதேச புத்த பல்கலைக்கழகம் ..! திரிபுராவில் அடிக்கல்.!
திரிபுராவில், இந்தியாவின் முதல் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக ஆரம்பிக்கப்படும் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உலக புத்த போப் அமைப்பின் தலைமை துறவியான வென் ஷக்யா காசன் என்பவரால், இந்த அடிக்கல் நாட்டு விழா தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட ஏழு நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் எம்.எல்.ஏ.சங்கர், பகுஜன் ஹிதாயா கல்வி அறக்கட்டளை-யின் (BHET) தலைவர் டாக்டர்.தம்மாபியா மற்றும் பலர் கலந்துகொண்டனர். புத்த மதத்தின் ஆன்மீக தலைவராக கருதப்படும் தலாய்லாமா உடல்நலக் குறைவால் இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை.
தலாய்லாமா தனது அறிக்கையில் “இந்தியாவின் பாரம்பரிய கொள்கைகளான ‘அகிம்சை’ மற்றும் ‘கருணை’ ஆகியவற்றை திரிபுரா மட்டுமின்றி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளுக்கும் கொண்டுபோய் சேர்ப்பதில் இந்த புத்த பல்கலைக்கழகமானது முக்கிய பங்கு வகிக்கும்” என கூறியுள்ளார்.
மேலும் புத்த கலாச்சாரத்தை வளர்க்க உதவுவதில் இந்தியாவின் பங்கு அதிகம், இதனால் இந்தியாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்று தலைமை துறவி ஷக்யா காசன் கூறியுள்ளார். இந்த பல்கலைக்கழகமானது, பகுஜன் ஹிதாயா கல்வி அறக்கட்டளை மூலம், அரசாங்கத்தால் 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டப்பட்டு வருகிறது.
இந்த பல்கலைக்கழகத்தில் 31 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பௌத்த இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றைப் பற்றி படிப்பதற்கான வாய்ப்புகள் அளிக்கப்படும் என்றும் மருத்துவம்,தொழில்நுட்பம் சார்ந்த கல்லூரிகளும் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.