இந்தியாவின் முதல் தொற்று பாதித்த நபருக்கு மீண்டும் கொரோனா..!
இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பாதித்த மருத்துவ மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் உள்ள திரிசூரில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திரிசூர் டி.எம்.ஓ. மருத்துவர் கே.ஜே.ரீனா தெரிவித்துள்ளதாவது, இந்த மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டிஜன் எதிர்மறையாகவும், அறிகுறிகளற்றவராகவும் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாணவி படிப்பு காரணமாக டெல்லி செல்லவிருந்ததால் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். இதில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை முடிவுகள் நேர்மறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் இப்போது அந்த பெண் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மேலும், நலமாகவும் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
வூஹான் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இந்த மருத்துவ மாணவி, செமஸ்டர் விடுமுறையில் நாட்டிற்கு திரும்பினார். இங்கு வந்த ஒரு சில நாட்களுக்கு பிறகு நாட்டின் முதல் கொரோனா நோயாளியாக மாறினார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன்பின்னர் திரிசூர் மருத்துவக்கல்லூரியில் சுமார் 3 வார சிகிச்சைக்கு பிறகு, இவருக்கு இரண்டு முறை கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இவர் குணமடைந்ததை உறுதி செய்த பிறகே இவரை வீட்டிற்கு பிப்ரவரி 20 ஆம் தேதி அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.