இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் ஜூலை 11க்கு ஒத்திவைப்பு..!
இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தல் ஜூலை 11க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாலியல் தொந்தரவு குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் WFI தலைவர் பிரிஜ் பூஷன், கடந்த மார்ச் மாதத்துடன் தனது மூன்றாவது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் WFI தலைவர் தேர்தல் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் விளையாட்டு அமைச்சகம் அதனை செல்லாது என அறிவித்தது.
பின் இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கும் இரண்டு உறுப்பினர் அடங்கிய குழுவை நியமித்தது. இதனையடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம்(IOC) அறிவித்திருந்தது.
ஆனால் தற்பொழுது, தேர்தலை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக கமிட்டித் தலைவர் பூபேந்தர் சிங் பஜ்வா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மகேஷ் மிட்டல் குமாரை தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஒலிம்பிக் சங்கம் நியமித்துள்ளது.