“பந்தாடப்பட்ட இந்திய அணி” புகழ்ந்த ரவி சாஸ்திரி..!!
இங்கிலாந்து தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட், என அனைத்துத் தொடர்களில் மண்ணைக் கவ்வியது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி.
இங்கிலாந்து அணியுடன் டெஸ்டில், 4 – 1 என்ற கணக்கில் தொடரை இழந்தது இந்திய அணி. இந்நிலையில், ‘சமீப காலமாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த இந்திய அணியிலேயே இது தான் சிறந்தது’ என்று இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு முன்னாள் வீரர்களிடமிருந்தும், ரசிகர்களிடமிருந்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இறுதிப் போட்டிக்கு முன்னர் பேசிய சாஸ்திரி, ‘நான் இந்தியாவுக்கு திரும்புகையில் அணி குறித்து மிகுந்த நேர்மறையான பல எண்ணங்களுடனேயே திரும்புவேன். நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அதேபோல, இந்த அணியும் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அது சரியான திசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. விமர்சனங்கள் குறித்து நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
எங்கள் வேலையை மட்டும் சரியாக செய்ய முயல்வோம். கடைசி 3 ஆண்டுகளைப் பார்த்தால், நாங்கள் 3 வெளிநாட்டுத் தொடர்களையும், 9 வெளிநாட்டுப் போட்டிகளையும் வென்றுள்ளோம். இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய விஷயத்தை சாதித்த ஒரு அணியை கடந்த 15 முதல் 20 ஆண்டுகளாக நான் கண்டதில்லை’ என்றார்.
இதற்குத் தான் வரிந்துகட்டிக் கொண்டு வந்துவிட்டனர் முன்னாள் வீரர்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘ரவி சாஸ்திரியின் கருத்தில் முதிர்வுத் தன்மை இல்லை’ என்றார்.
சேவாக், ‘நல்ல அணிகள் களத்தில் தான் தங்களது திறமையை வெளிக்காட்டுவார்கள். டிரெஸ்ஸிங் அறையில் அமர்ந்து கொண்டு, பேசுவதன் மூலம் அல்ல’ என்று விமர்சனம் செய்தார்.
DINASUVADU