ஏழைகளுக்கான சொத்து பகிர்வு.., அமெரிக்காவை பின்பற்றும் காங்கிரஸ் வாக்குறுதி.?  

Sam Pitroda - Rahul Gandhi

Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். 

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். கடந்த வார வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) முதற்கட்ட தேர்தல் முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இந்த வார வெள்ளிகிழமை (ஏப்ரல் 26) நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

காங்கிரசின் வாக்குறுதி :

காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதியில் நில உச்சவரம்பு சட்டம் அமைத்து, பணக்கார்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டு, அதிகமாக இருப்பின் அவை ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் அதற்கு ஒரு கமிட்டி அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பிரதமர் மோடி சமீபகால பிரச்சார கூட்டத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்துக்களை காங்கிரஸ் கட்சி அபகரித்து அதனை அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும், நாட்டில் ஊடுருவி உள்ளவர்களுக்கும் கொடுக்க உள்ளனர் என்றும், பெண்கள் வைத்துள்ள தங்கத்தை கூட காங்கிரஸ் கணக்கிடும் என்றும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.

அமெரிக்கா விதிமுறை :

இந்நிலையில், காங்கிரசின் வாக்குறுதி பற்றி, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவரும், இந்தியா – அமெரிக்கா தொழிலதிபருமான சாம் பிட்ரோடா ANI செய்தி நிறுவனத்திற்கு அளிதத் பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். அதில், அமெரிக்காவில் இதே போல சொத்து உச்சவரம்பு சட்டம் அமலில் இருக்கிறது என சுட்டி காட்டினார்.

45% -55% பங்கீடு :

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவில் பரம்பரை சொத்து வரி விதி அமலில் உள்ளது. அதாவது பணக்காரர்கள் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்தால் தங்கள் சொத்துக்களை அடுத்த தலைமுறை வாரிசுகளுக்கு கொடுக்கும் போது 45 சதவீதத்தை மட்டுமே கொடுக்க முடியும். மீதம் உள்ள 55 சதவீத சொத்துக்களை அரசு, பொதுமக்களுக்காக அமெரிக்க அரசு பறிமுதல் செய்துவிடும்.

ஏழை – பணக்காரர் :

ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. ஒருவர் எவ்வளவு வேண்டுமானாலும் சொத்துக்களை சம்பாதித்து அதனை தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்துவிடலாம். இதன் காரணமாக பணக்காரர்கள் மற்றும் ஏழை மக்களிடையே இடைவெளி என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ( பணக்காரர்கள் மேலும் பணக்காரார்களாக மாறுவார்கள். ஏழை மேலும் ஏழையாகிறார்).

குறைந்தபட்ச ஊதியம் :

மேலும், அமெரிக்காவில் குறைந்தபட்ச ஊதியம் என்று ஒன்று உள்ளது. ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. பணக்கார்கள் தங்கள் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கொடுத்து பணியமர்த்தி கொள்கிறார்கள். அதனை நிவர்த்தி செய்யவும் காங்கிரஸ், தங்கள் வாக்குறுதியில் குறைந்தபட்ச ஊதியம் 400 ரூபாய் என அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது என காங்கிரஸ் வாக்குறுதிகள் பற்றி  இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா நேர்காணலில் குறிப்பிட்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்