இந்திய கடற்படை சேடக் ஹெலிகாப்டர் விபத்து.! ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்.!
இன்று (சனிக்கிழமை) கொச்சிக்கு அருகில் விலிங்டன் தீவில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தில் உள்ள விமான தளமான ஐஎன்எஸ் கருடா ஓடுபாதையில் சேடக் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இந்திய கடற்படையின் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பிற்பகல் 2:30 மணியளவில் நடந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டு பேருடன் புறப்பட்ட ஹெலிகாப்டர், புறப்பட்ட உடனேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது ஹெலிகாப்டரின் ரோட்டர் பிளேடு கடற்படை அதிகாரி யோகேந்திர சிங் தலையில் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.
அதோடு ஹெலிகாப்டரின் பைலட் மற்றும் துணை விமானி இருவரும் காயம் அடைந்தநிலையில், கடற்படை தலைமையகத்தில் அருகிலுள்ள சஞ்சீவ்னி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து, எர்ணாகுளம் துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் கூறப்பட்டாலும், விபத்துக்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க, விசாரணைக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்தியக் கடற்படைத் தலைமை அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் இந்தியக் கடற்படையின் அனைத்துப் பணியாளர்களும் விபத்தில் உயிரிழந்த யோகேந்திர சிங்கிற்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.