சுட்டெரிக்கும் வெப்பநிலை… அதிகரிக்கும் வெப்ப அலை… காரணம் என்ன.?
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை அதிகரித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகள், வயதானோர் குறிப்பிட்ட வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்த வரையில் நண்பகல் வெயிலில் வேலை செய்வதை தவிர்க்கவும் அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்த தகவலின்படி, அடுத்த 5 நாட்களுக்கு கிழக்கு மற்றும் தென் இந்திய பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
IMD அறிவிப்பின்படி, கேரளா மாநிலம் கோட்டயத்தில் 38.5 டிகிரி செல்சியஸ், பாலக்கோட்டில் 41 டிகிரி செல்சியஸ், ஆலப்புழாவில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகபட்சமாக பதிவாகியுள்ளது என்றும், ஆந்திராவில், ஆரோக்கியவரம் பகுதியில் 41 டிகிரி செல்சியஸ், கர்னூவில் 45.2 டிகிரி செல்சியஸ், பெங்களூருவில் 38.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும், தமிழகத்தில் தர்மபுரியில் அதிகபட்சமாக 41.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா , ஆந்திரா , தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், கேரளா மற்றும் தமிழகத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பநிலை நிலவும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்தை விட ஆண்டுதோறும் அதிகரிக்கும் வெப்பநிலை குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியார்கள் கூறுகையில், அதிகரிக்கும் வெப்பநிலைக்கு காலநிலை மாற்றம் ஓர் காரணமாக கூறப்பட்டாலும், பிரதான காரணமாக கூறப்படுவது காற்றில் ஈரப்பத அளவு வெகுமளவு குறைந்ததே என்றும், வெப்ப காற்றின் திசை மாறுபாடு காரணமாகவும் ஆண்டுதோறும் வெப்பநிலை மற்றும் வெப்பஅலை அதிகரிக்க காரணமாக அமைகிறது என்றும் இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.