காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் முடிவுக்கு இந்தியா பதிலடி
காஷ்மீர் விவகாரத்தில் இந்திய தூதரை வெளியேற்ற முடிவு செய்த பாகிஸ்தான் அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மேலும் காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் இரண்டு பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் தரப்பில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியது.அப்பொழுது அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பேசுகையில்,காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு செல்வோம்.இந்தியாவில் சிறுபான்மையினர் நடத்தப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முன் எடுத்துரைப்போம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.
இதற்கு பின்னர் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் சார்பில் கூட்டம் நடைபெற்றது.பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.இதில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் ,வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி,முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த கூட்டத்தில், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரை வெளியேற்றவும்,இந்தியாவில் உள்ள தங்களது தூதரை திரும்ப பெறவும் முடிவு செய்யப்பட்டது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை குறித்து மறு ஆய்வு செய்வது மற்றும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு செல்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசின் இந்த முடிவுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் எடுத்துள்ள அவசர நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்தியா உடனான உறவுகள் தொடர்பாக பாகிஸ்தான் ஒருதலைபட்சமான முடிவு எடுப்பதாக அறிகிறோம். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவை இந்தியாவின் உள்விவகாரம்.இந்த விவகாரத்தில் யார் தலையிட முயன்றாலும் அவர்களின் முயற்சி வெற்றி பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.