‘இந்திய குடும்பங்கள் பணக்கஷ்டத்தில் இல்லை’..! நிதிநிலை அறிக்கையில் தகவல்.!
டெல்லி : நாளை மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும் நிலையில் தற்போது தலைமை பொருளாதார ஆலோசகரான அனந்த நாகேஸ்வரன் பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நாளை மத்திய பொது பட்ஜெட்டானது தாக்கல் செய்யவுள்ளனர். இந்நிலையில், இன்று பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். மேலும், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “இந்தியக் குடும்பங்கள் பணக் கஷ்டத்தில் இல்லை, மாறாக முதலீடு செய்து வருகின்றார்கள். சர்வதேச அளவிலான வர்த்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது அதிகரித்துள்ளது. மேலும், இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் இருந்து வருகிறது. இதனால், அன்னிய நேரடி முதலீடு, நிறுவன விரிவாக்க நிதி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேற்கொண்டு அன்னிய நேரடி முதலீட்டை கூட்டுவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்தும் வருகிறது.
பருவமழை பெய்து வருவதால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் உருவாகி இருக்கிறது. மேலும், விலைவாசி உயர்வை குறிக்கும் பணவீக்கம் கட்டுக்குள் இருந்து வருகிறது. பல நாடுகள் ஒரே நேரத்தில் ஆற்றல் மாற்றத்தை அடைய முயற்சிப்பதால், வளங்கள் கிடைப்பதில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும். மேலும், உள்நாட்டு வளர்ச்சி மிக முக்கியமானதாக உள்ளது.
கடந்த மார்ச்-24 வரையில் சராசரி உள்நாட்டு வளர்ச்சி விகிதம் சுமார் 8% சதவீதமாக இருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியானது கொரானாவிற்கு முந்தைய நிலையில் இருந்ததை விட 20% சதவீதம் அதிகமாகவும் உள்ளது. முதலீடு என்பது பொதுத்துறை மூலதனத்தால் மட்டுமல்ல. அது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் என இரண்டு மூலதனத்தால் தான் அமைப்புகளை முன்னெடுத்து வருகின்றன”, என அந்த பேட்டியில் அனந்த நாகேஸ்வரன் கூறி இருந்தார்.