சீன எல்லையை கண்காணிக்க.. பாரத் ட்ரோன்களை இறங்கிய இந்திய இராணுவம்.
கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய, சீன இரு நாட்டு வீரர்களுக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிழந்தனர். சீனா தரப்பில் 35 வீரர்களும் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது. இதனால், எல்லையில் இரு நாடும் படைகளை குவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கிழக்கு லடாக்கில் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வெளியேற தொடங்கின. இந்நிலையில், இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே நடந்து வரும் எல்லை தகராறுக்கு மத்தியில், கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் உயரமான பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் துல்லியமான கண்காணிப்பை மேற்கொள்வதற்காக சண்டிகரை அடிப்படையாக கொண்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) தனது உள்நாட்டில் உருவாக்கிய பாரத் என்ற ட்ரோனை இந்திய ராணுவத்திற்கு வழங்கியுள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் நடந்து வரும் தகராறில் துல்லியமான கண்காணிப்புக்கு இந்திய ராணுவத்திற்கு ட்ரோன்கள் தேவை. இந்தத் தேவைக்காக, டிஆர்டிஓ அதற்கு பாரத் ட்ரோன்களை வழங்கியுள்ளது. ரேடாரால் மூலம் கண்டுபிடிக்க முடியாத வகையில் ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக குளிர் மற்றும் கடும் வெப்பம் ஆகியவற்றிலும் செயல்படும் திறன் கொண்டது. அடர்ந்த வனத்தில் ஒளிந்துள்ள மனிதர்களை கண்டறிய கூடியது.
அந்நிய நாட்டு படைகளின் ஊடுருவல்கள் , அவர்களது நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்ற வகையில் டிரோன்கள் செயல்படும்.