டெல்லியில் இந்திய ராணுவ தினத்தையொட்டி சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி!
நாடு விடுதலை பெற்ற பின் 1949-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி இந்திய ராணுவத் தலைமைத் தளபதியாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். அதற்கு முன்பு வரை ஆங்கிலேயரான சர் ஃபிரான்சிஸ் பட்சர் என்பவர் தலைமைத் தளபதியாக இருந்த நிலையில் இந்தியர் ஒருவரிடம் தலைமைத் தளபதி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 15-ஆம் தேதி இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. இன்று இந்திய ராணுவ தினத்தையொட்டி டெல்லியில் உள்ள கரியப்பா ராணுவ மைதானத்தில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை தலைமைத் தளபதி பிபின் ராவத் ஏற்றுக்கொண்டார்.
ராணுவ வீரர்களுக்கு விருதுகளையும் தலைமைத்தளபதி பிபின் ராவத் வழங்கினார். மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, மறைவுக்குப் பிந்தைய விருதுகளை அவர்களது குடும்பத்தினரிடம் அவர் வழங்கினார்.