ஆறு புதிய டோர்னியர் டூ-228 விமானங்களில் முதல் விமானத்தை அறிமுகப்படுத்திய இந்திய விமானப்படை.!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்த ஆறு புதிய டோர்னியர் டூ-228 விமானங்களில் முதல் விமானத்தை இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 10ம் தேதி டோர்னியர் டூ-228 விமானங்களை கொள்முதல் செய்ய இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) உடன் ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தம் ஆனது 667 கோடி ரூபாய் மதிப்பில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆறு டோர்னியர் டூ-228 விமானங்களை இந்திய விமானப்படைக்கு வழங்க வேண்டும். அந்த வகையில், இன்று முதலாவது டோர்னியர் டூ-228 விமானத்தை இந்திய விமானப்படைக்கு வழங்கியுள்ளது.
இந்த டோர்னியர்-228 ரக விமானமானது 19 இருக்கைகள் கொண்ட பல்நோக்கு இலகுரக போக்குவரத்து விமானமாகும். இதில் ஒவ்வொரு புதிய விமானமும் மேம்படுத்தப்பட்ட என்ஜின்கள், ஐந்து பிளேட் கலப்பு ப்ரொப்பல்லர்கள், பல மின்னணு உபகரணங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட ஏவியோனிக்ஸ் மற்றும் கண்ணாடி காக்பிட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விமானங்கள் போக்குவரத்து, விமானப்படை பயிற்சி, கடலோர காவல் பணி, கடல்சார் கண்காணிப்பு, தேடல் மற்றும் மீட்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. புதிய டோர்னியர் டூ-228 விமானத்தின் அறிமுகம் இந்த பணிகளில் இந்திய விமானப்படையின் திறன்களை அதிகரிக்கும். இது இந்தியாவின் வான்வெளியைப் பாதுகாக்க இந்திய விமானப்படைக்கு உதவும்.