கேரளா வளர்ச்சி அடைந்தால் நாடே வளர்ச்சி அடையும்.! பிரதமர் மோடி உரை.!
கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும். – கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கிய பின்னர் பிரதமர் மோடி பேச்சு.
பிரதமர் மோடி இன்று கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவங்கி வைத்தார். அதன் பிறகு இந்தியாவிலேயே முதன் முதலாக கொச்சி நகரின் அருகே உள்ள 11 தீவுகளை இணைக்கும் வண்ணம் மெட்ரோ கடல் போக்குவரத்து சேவையை பிரதமர் துவங்கினார். இதன் மூலம் 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி அந்த மெட்ரோ கப்பல் மூலம் பயணித்து கொள்ளலாம்.
அதன் பிறகு, திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அந்த விழாவில் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளை முடித்த பிறகுபிரதமர் மோடி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், இந்திய அரசு கூட்டுறவு கூட்டாட்சியை வலியுறுத்தி செயல்பட்டு வருகிறது. மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கிறது. கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும் எனவும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.