கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்திற்கு முன்னேறும் இந்தியா.. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்வு!
இந்தியாவில் ஒரே நாளில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6.73 லட்சத்தை கடந்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக இந்தியாவில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 613 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19,268 உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,09,083 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 244814 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
ரஷ்யாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 6,74,515 ஆக உயர்ந்துள்ள நிலையில், உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையில் 3-ஆம் இடத்தில் உள்ளது. ஆனால், தற்பொழுது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 6,73,165 ஆக உயர்ந்த நிலையில், மூன்றாம் இடத்திற்கு முன்னேற உள்ளது குறிப்பிடத்தக்கது.