India – Saudi Arabia: இந்தியா – சவுதி அரேபியா.! மிகப்பெரிய போக்குவரத்து வழித்தடம்.. இருநாட்டு தலைவர்கள் ஆலோசனை.!

தலைநகர் டெல்லியில் கடந்த இரு தினங்கள் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்று நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாடு 2023ல், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், சவுதி அரேபியா இளவரசர், உட்பட பல்வேறு உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ள சவுதி அரேபிய இளவரசரும் பிரதமருமான முகமது சல்மானுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் வழியாக ஐரோப்பா வரை சரக்கு போக்குவரத்து வழித்தடம் குறித்து பிரதமர் மோடி சவூதி அரேபிய இளவரசர் முகமது சல்மான் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்தியா – சவுதி அரேபியா முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் வர்த்தகத்தை பெருக்குவது தொடர்பாகவும் இரு நாட்டு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சீனாவுக்கு போட்டியாக மேற்கு நாடுகளுக்கு தனி பொருளாதார வழித்தடத்தை உருவாக்க இந்தியா முயற்சி எடுத்து வரும் நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் முக்கிய வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சவுதி அரேபியாவின் இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத் கூறுகையில், இந்த (இந்தியா-சவுதி அரேபியா) உறவின் வரலாற்றில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை, ஆனால், நம் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கவும், வாய்ப்புகளை உருவாக்கவும் ஒத்துழைப்பு உள்ளது. ஜி 20 உச்சிமாநாட்டின் நிர்வாகத்திற்கும், மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பொருளாதாரம மேம்பாடு உட்பட முயற்சிகளுக்கும் உங்களை வாழ்த்துகிறேன் என்றார்.
இதுபோன்று பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதார வழித்தடத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம். இந்த வழித்தடமானது இரு நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஆசியா, மேற்கு நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் இணைப்பை வழங்கவும் உதவும். ஆசியா மற்றும் ஐரோப்பா. உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கின் கீழ், சவுதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவைப் பொறுத்தவரை, சவுதி அரேபியா எங்களுக்கு முக்கிய நாடுகளில் ஒன்றாகும். எங்கள் பேச்சுவார்த்தையில், எங்கள் கூட்டாண்மையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான பல முயற்சிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இன்றைய பேச்சு வார்த்தைகள் நமது உறவுகளுக்கு புதிய ஆற்றலையும், வழியையும் வழங்கும். இது மனிதகுலத்தின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட எங்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றார்.