சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்தியா ..!
இந்திய கடற்படை 24 மணி நேரத்தில் வெற்றிகரமாக இரண்டாவது கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கையை தடுத்துள்ளது. சோமாலியாவை சேர்ந்த 11 கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த மீன்பிடி கப்பலான அல் நயீமி மற்றும் 19 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது.
நேற்று ஈரானை சார்ந்த 17 பேர் ஏடன் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென சோமாலியா கடற்கொள்ளையர்கள் அந்தக் கப்பலை சிறைபிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் விரைந்து சென்று மீன்பிடி கப்பல் மற்றும் கப்பலில் இருந்த 17 ஈரானை சார்ந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
கடத்தப்பட்ட ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை..!
அதன் பின்னர் அரபிக்கடலில் ஈரானின் கொடியுடன் கூடிய மீன்பிடி கப்பலான அல் நயீமை சோமாலியாவை சேர்ந்த 11 கடற்கொள்ளையர்கள் சிறை பிடித்தனர். இந்த தகவல் அறிந்து அங்கு இருந்த ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் உள்ள இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் மீன்பிடி கப்பலான அல் நயீமி மற்றும் கப்பலில் இருந்த 19 பாகிஸ்தானியர்களை வெற்றிகரமாக மீட்டனர்.
INS சுமித்ரா, 36 மணி நேரத்திற்குள், தெற்கு அரபிக்கடலில் கடத்தப்பட்ட இரண்டு மீன்பிடி கப்பல்களில் இருந்து மொத்தம் 36 பேரை (17 ஈரானியர்கள் மற்றும் 19 பாகிஸ்தானியர்கள் ) மீட்டுள்ளது. கடற்படையின் விரைவான மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக 36 பேரை மீட்டது மட்டுமல்லாமல் இப்பகுதியில் கடற்கொள்ளையர் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தடுத்து வருகிறது.