தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல் கல்லை எட்டிய இந்தியா – மத்திய சுகாதார அமைச்சகம்
நாடு முழுவதும் இதுவரை 50 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 3,18,95,385 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 4,26,754 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை மொத்தம்3,10,55,861 ஆகவும், பாதிக்கப்பட்ட 4,12,153 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், இதனை தடுப்பதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி தான் என்று முடிவெடுத்து, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிக்கு மத்திய அனுமதி அளித்து, கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது, இதன்பிறகு வயது வரம்புப்படி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்களிடம் அச்சம் நிலவி வந்த நிலையில், தற்போது அனைவரும் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 50 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.
அதாவது, நாடு முழுவதும் இதுவரை 50,10,09,609 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 20 நாட்களில் மட்டும் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், கடந்த 24 மணி நேரத்தில், 49,55,138 பேருக்கு தடுப்பூசி செலுத்தியதாகவும் விளக்கமளித்துள்ளது.