முழு ஒத்துழைப்புடன் முடிந்த சுய ஊரடங்கு… மாலையில் கைகளை தட்டி பொதுமக்கள் நன்றி…

உலகில் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கிக்கொண்டிருக்கும் கொடிய உயிர்க்கொல்லி ‘கொரோனா’ வைரஸை விரட்ட, நேற்று(மார்ச் 22) நாடு முழுவதும் நடந்த மக்கள் ஊரடங்கில், தமிழகம் புதிய வரலாறு படைத்துள்ளது. நேற்று , இந்திய சமூகத்தையும், மக்களையும் காக்க, ஜாதி, மத, பேதமின்றி மக்கள் ஒத்துழைப்பு அளித்து, மனித உயிர்களை காக்க உறுதியேற்றனர். அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி ஒத்துழைப்பு அளித்தனர். நேற்றைய ஊரடங்கின் போது, மருந்து கடையினர் சேவை மனப்பான்மையுடன், கடைகளை திறந்து வைத்திருந்தனர். மருத்துவமனை ஊழியர்கள், சுகாதார துறையினர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி துாய்மை பணியாளர்கள், சுகாதார பிரிவினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்டோரும், மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர்.
மேலும், மக்களின் ஊரடங்கையும், அரசுத்துறையினரின் அர்ப்பணிப்பையும், பத்திரிகை, ‘டிவி’ பணியாளர்கள், களத்தில் இறங்கி தொகுத்து, களப்பணியாற்றினர். அத்தியவசிய பொருளான பால் மற்றும் பால் பொருள்களுக்கு எந்த தட்டுப்பாடும் ஏற்படவில்லை. இந்த சுய ஊரடங்கு முடிந்ததும் மக்கள் நம் பாரத பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க சேவை துறையினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்கள் தங்கள் வீடுகளின் வாசல்களிலும், மாடிகளில் நின்றும், கைகளை தட்டியும் மணியடித்தும் நன்றிகளை தெரிவித்தனர். மேலும் காவல் பணியில் இருந்த காவலர்கள் தங்கள் கார்களின் சைரங்களை ஒலிக்க விட்டு நன்றி தெரிவித்தனர்.