தங்க சுரங்கமா?…. அப்படியொன்றும் கண்டுபிடிக்கவில்லையே… இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் மறுப்பு..
இந்தியாவையே வியப்பில் ஆழ்த்திய செய்தி என்னவென்றால், உத்தரபிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் 2 தங்க சுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்பது தான். சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் இந்த தங்க சுரங்கங்கள் உள்ளதாக கூறப்பட்டன. மேலும் இங்கு சுமார் 3,350 டன் தங்கம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டது. இந்நிலையில், தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் அதனை வெட்டி எடுக்கும் பணிக்கு நில ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கையில் உத்தரபிரதேச மாநில அரசு இறங்கியது. இ-டெண்டர் ஏலம் விடப்பட இருப்பதாகவும் இதற்காக 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அந்த மாநில அரசு அமைத்தது என தகவள்கள் வெளிவந்தன. சோன்பகதி கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் மட்டுமே 2,943.26 டன் தங்கம் இருப்பு இருப்பதாக தகவல்கள் பரப்பப்பட்டன. இந்நிலையில்,இந்த விவகாரத்தில், உத்திர பிரதேசத்தில் எந்த தங்க சுரங்கமும் கண்டுபிடிக்கவில்லை என்று தற்போது இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தற்போது தெரிவித்துள்ளது.