சென்னையில் இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படை கூட்டு பயிற்சி!
இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படைகள் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டனர். கடல் வழியாக தீவிரவாத ஊடுருவல் மற்றும் கடத்தல் உள்ளிட்டவற்றை தடுக்க இந்திய பாதுகாப்பு படைகள் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் ஜப்பான் நாட்டு கடலோர காவல் படையுடன் இந்திய கடலோர காவல் படை இது வரை 8 முறை கூட்டுபயிற்சியை மேற்கொண்டுள்ளது.
சாரெக்ஸ் -18 என பெயரிடப்பட்டு இந்த ஆண்டுக்கான கூட்டு பயிற்சி இன்று தொடங்கி வரும் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. பயிற்சிகாக ஜப்பான் கடலோர காவல் படையின் டி – சுகாரு என்ற கப்பல் சென்னை துறைமுகம் வந்துள்ளது. கப்பலில் வந்த ஜப்பான் கடலோர காவல் படையினருக்கு இந்திய கடலோர காவல் படையினர் வரவேற்பு அளித்தனர்.
கூட்டுப் பயிற்சியின் அடுத்தடுத்த நாட்களில் வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் இரு நாட்டு வீரர்களும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளனர். ஒக்கி புயல் போன்ற பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது என இரு நாட்டு கடலோர காவல் படை வீரர்களும் பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் கடலோர காவல் படையின் கமாண்டண்ட் அதிகாரி யூஜி சுயோ மோட்டோ, கூட்டுப் பயிற்சியின் மூலம் இரு நாட்டு நல்லுறவு மேலோங்குவதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த புதிய யுக்திகளை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்..
source: dinasuvadu.com