“உலக நாடுகளை விட, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம்”- மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!
உலகநாடுகளை விட, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் மற்ற உலகநாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் இதுவரை 25,30,490 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 18,09,702 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதில் 49,170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், இந்தியா 130 கோடி மக்கள் தொகையுடன் உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், கொரோனா பாதித்தோர் பட்டியலில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் முதல் பாதிப்பை உறுதிசெய்தபோது, கொரோனாவுக்கான பரிசோதனை மையம், ஒன்றே ஒன்று மட்டும் இருந்தது. ஆனால் தற்பொழுது 1,400 க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் மற்ற உலகநாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் எனவும், உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு எனவும் தெரிவித்தார்.
மேலும், காசநோயை அகற்ற, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த இலக்கை விட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே (அதாவது 2025- ம் ஆண்டிற்குள்) எட்டிவிடும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். 2022 இறுதிக்குள், ஆயுஷ்மான் பாரத் பி.எம்.ஜே.ஏ திட்டத்தின் கீழ், 1,50,000 ஆரோக்கிய மையங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.