எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது-வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்
- இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
- அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான சாட்சியங்கள் & மின்னணு ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியாவின் மிராஜ் 2000 என்ற 12 போர் விமானங்கள் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை அழித்தது.அதேபோல் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க தொடர்ந்து முயற்சித்து வந்தது.
பின் பிப்ரவரி-27 ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை விமானமான F16 இந்தியாவிற்குள் அத்துமீறியபோது இந்திய விமானப்படையின் மிக் 21 போர் விமானத்தால் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.ஆனால் அந்த தாக்குதலின்போது மிக் 21 போர் விமானத்தை காணவில்லை.அதேபோல் விமானியையும் காணவில்லை(விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்).
பாகிஸ்தானிடம் இது தொடர்பாக கேட்டபோது, விமானி அபிநந்தன் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தது.பின்னர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் இருக்கும் நிலையில் அவரை மீட்க இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
பின் இது தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு வெளியிட்டார்.அதில் அபிநந்தன் மார்ச் 1-ஆம் தேதி விடுவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.பின்னர் இருநாட்டு சட்ட நடவடிக்கைகளைத் தொடா்ந்து அபிநந்தன் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாா்.
இந்நிலையில் இன்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில்,பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறும் 2வது இந்திய விமானத்தின் வீடியோ இருப்பதாக சொல்லும் பாகிஸ்தான் ஏன் அதனை வெளியிடவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான சாட்சியங்கள் & மின்னணு ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளது.
எஃப் 16 விமானம் எந்த பயன்பாட்டிற்காக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது என்பதை அமெரிக்கா விளக்க வேண்டும்.தீவிரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பாகிஸ்தானில் இல்லை என பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வருவது வருத்தமளிக்கிறது.
நிரவ் மோடியை இந்தியா கொண்டுவருவதற்காக பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். நிரவ் மோடியை நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கை குறித்து பிரிட்டன் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.