ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷம்… கண்டனம் தெரிவித்த இந்தியா!
Khalistan: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷம் எழுப்பப்பட்டதுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவில் சீக்கியர்கள் பாரம்பரியமாக கொண்டாடப்படும் கல்சா தின விழா நேற்று ஒட்டாரியோ என்ற பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேச தொடங்கியபோது காலிஸ்தான் ஆதரவு கோஷங்களை எழுந்துள்ளது.
இருந்தாலும் தொடர்ந்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் சீக்கிய மக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை எப்போதும் பாதுகாப்பதாகவும், வெறுப்பு மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக சமூகத்தை பாதுகாப்பதில் கனடா அரசு உறுதியாக இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசும்போது அங்கு திரண்டிருந்தவர்கள் தொடர்ந்து ‛‛காலிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற முழக்கங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதுதான் தற்போது இந்தியாவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
டெல்லியில் உள்ள கனடா தூதரை அழைத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியா கூறியதாவது, பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றுக்கு கனடா இடமளித்துள்ளதை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டியுள்ளது.
இது இந்தியா – கனடா இடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் வன்முறை சூழலை ஊக்குவிப்பது நாட்டு மக்களுக்கு பெரிய தீங்கு விளைவிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே, சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கொள்கையுடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கமானது ஒடுக்கப்பட்டு இருந்தாலும், தொடர்ந்து தங்களது கோரிக்கையை எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் முந்தைய காலங்களில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்த இயக்கம் ஈடுபட்டுள்ளது. இதனால் காலிஸ்தானுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்ற நிகழ்ச்சியில் காலிஸ்தான் கோஷங்கள் எழுப்பப்பட்டது இந்தியாவில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.