இந்தியா – ஆஸ்திரேலியா அமைச்சர்கள் மட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை!
டெல்லியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உயர்நிலை 2+2 வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை.
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கு இடையே அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரிஸ் பெய்ன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், இருநாட்டு உயர் அதிகாரிகளும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் விவகாரம், சர்வதேச அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இந்திய பெருங்கடல் மற்றும் பசிபிக் கடல் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் குறித்தும் பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தோ-பசிபிக் பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான குவாட் உறுப்பு நாடுகளின் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளுக்கு இடையே வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவைத் தவிர, குவாட் நாடுகளில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் இருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு இன்று மாலை ஆஸ்திரேலிய அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.