INDIA Alliance: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர்.! அனைத்து அலுவல்களில் கலந்துகொள்ள எதிர்க்கட்சிகள் முடிவு.!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று முதல் வரும் செப்டம்பர் 22ம் தேதி (வெள்ளி) வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் முதலில் அறிவிக்கப்படும் போது நிகழ்ச்சி நிரல் பற்றி குறிப்பிடப்படவில்லை. அதன் பிறகு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சிறப்பு கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரலானது வெளியிடப்பட்டது.
அதில் நாடாளுமன்றம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு முதல் நாளில் விவாதிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர் திருத்த சட்ட மசோதா, சட்டப்பேரவைகளில் பெண்களு 33 சதவீத இடஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் பற்றி இரு அவைகளிலும் விவாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது. இது தவிர மற்ற சில மசோதாக்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டமானது முதல் நாள் மட்டும் பழைய கட்டிடத்திலும், மற்ற நான்கு நான்களும் புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்திலும் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அலுவலகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், மக்களவை, மாநிலங்களவை என நாளுடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களில் பங்குபெறப் போவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.