நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்… இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதை எதிர்கொள்ள பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. குறிப்பாக, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் இந்தியா கூட்டணி கட்சிகள் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதுவும், நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகளை பார்த்து வேகமாக செயல்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தலை எப்படி ஒற்றுமையாக சந்திப்பது, பாஜகவை வீழ்த்த எந்த மாதிரியான வேட்பாளர்களை நிறுத்தலாம், பிரதமர் வேட்பாளர் யார், தொகுதி பங்கீடு என பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கையாண்டு வருகிறது. அந்தவகையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, இந்தியா கூட்டணியின் அமைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில், பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும், இந்தியா கூட்டணி அமைப்பாளராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
கைது செய்யப்படுகிறாரா..? கெஜ்ரிவால் இல்லம் முன்பு போலீஸ் குவிப்பு..!
இந்தியா கூட்டணி உருவானதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அதன் அமைப்பாளராக தேர்வாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை காணொளி மூலம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மல்லிகார்ஜுன கார்கே, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கும் கூட்டத்திற்கு பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் குறித்து இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.