INDIA Alliance: இந்தியா கூட்டணியில் சேர அழைக்காதது குறித்து எனக்கு கவலை இல்லை.! ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி..
அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கூட்டணி தான் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி. இந்தியா கூட்டணி கட்சிகள் இதுவரை மூன்று ஆலோசனை கூட்டங்களை நடத்தி உள்ளனர்.
இம்மாதம் தொடக்கத்தில் மும்பையில் இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில், இந்திய கூட்டணியில் சேர அழைக்கப்படாதது குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், “இந்திய கூட்டணியில் சேர அழைக்கப்படாதது குறித்து எனக்கு கவலை இல்லை. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் மற்றும் வடகிழக்கு மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த பல கட்சிகளும் இந்த கூட்டணியில் உறுப்பினர்களாக இல்லை.
“தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரை முன்னோக்கிச் சென்று மூன்றாவது அணியை உருவாக்கி, இதில் பல கட்சிகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். கே.சி.ஆர் தலைமை ஏற்றால் அரசியல் வெற்றிடம் நிரப்பப்படும். இந்த வெற்றிடத்தை இந்திய கூட்டணியால் நிரப்ப முடியவில்லை.” என்று கூறினார்.
இதற்கிடையில், மும்பையில் நடந்த இந்தியா கூட்டணியின் 3வது கூட்டத்தில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் பரப்புரை குழு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா கூட்டணியின் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள சரத்பவார் இல்லத்தில் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.