இந்திய அரசு மாலத்தீவு விவகாரத்தில் தலையிடுமாறு கோரிக்கை !
மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என்று அந்நாட்டு நீதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாலத்தீவு உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த முடியாது என ஆளும் அரசு கூறியுள்ளது.
தீவிரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் மொகமது நசீத் உள்பட 9 பேரை விடுவிக்குமாறு உத்தரவிட்ட மாலத்தீவு உச்சநீதிமன்றம், எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட 12 பேர் மீதான தகுதிநீக்கத்தையும் ரத்து செய்தது.
இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வந்த 12 எம்.பி.க்களை உள்ளே அனுமதிக்காத ராணுவத்தினர், நாடாளுமன்றத்தையே தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தனர். இதையடுத்து, ஆளும் அரசு மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவர உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளை பணிநீக்கம் செய்ய அதிபர் யாமீன் முயற்சி மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள நீதித்துறையினர், இந்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.