IndependenceDay2021: பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தல்!!
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் விழா நாடு முழுவதும் கொண்டாடபட உள்ள நிலையில், அந்நாளை முன்னிட்டு, மக்கும் தன்மையற்ற பொருளால் ஆன மூவர்ணக் கொடியை அகற்றுவது நடைமுறைச் சிக்கலாக இருப்பதால், மக்கள் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தேசியக் கொடி நாட்டு மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் அதனால் கவுரவமான இடத்தை பெற வேண்டும் எனவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசியக் கொடி மீது உலகளாவிய பாசமும், மரியாதையும் மற்றும் விசுவாசமும் உள்ளது.
இருப்பினும், தேசியக் கொடியை காட்சிப்படுத்துவதற்கு பொருந்தும் சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் மரபுகள் தொடர்பாக அரசாங்கத்தின் அமைப்புகள், மக்களிடமும், நிறுவனங்களிடமும் சரியான விழிப்புணர்வு இல்லாதது அடிக்கடி கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முக்கிய தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் சமயத்தில், காகிதத்தால் செய்யப்பட்ட மக்கும் தன்மை உள்ள தேசியக் கொடிகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
பிளாஸ்டிக் கொடிகள், காகிதக் கொடிகள் போல மக்கும் தன்மை கொண்டவை அல்ல என்பதால், இவை நீண்ட காலமாக சிதைவடைவதில்லை மற்றும் கொடியின் கவுரவத்துக்கு ஏற்ப பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை உரிய முறையில் அகற்றுவதை உறுதி செய்வது நடைமுறைச் சிக்கல் ஆகும்.
எனவே, முக்கியமான தேசிய, கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளின் சமயங்களில், தேசிய கவுரவத்தை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971 மற்றும் ‘இந்தியக் கொடி குறியீடு 2002’ மற்றும் அத்தகைய காகிதக் கொடிகளின் விதிமுறைகளின் அடிப்படையில், காகிதத்தால் செய்யப்பட்ட கொடிகள் பொதுமக்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நிகழ்வுக்குப் பிறகு தேசிய கோடியை நிராகரிக்கப்படவோ அல்லது தரையில் வீசப்படவோ கூடாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தனிப்பட்ட முறையில், கண்ணியத்திற்கு ஏற்ப தேசிய கொடிகளை அகற்றப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.