டெல்லியில் இன்று முதல் பள்ளிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு..!
உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து டெல்லி அரசாங்கம் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை திறக்க இன்று முதல் மீண்டும் தடை விதித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்ததால், ஒரு வாரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து, டெல்லியில் காற்றின் தரம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக மேம்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்பைத் தொடர்ந்து 10 நாட்களுக்கு பின்பு, டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. உச்சநீதிமன்றத்தில் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் காற்று மாசு தொடர்பான வழக்கு நேற்று நடைபெற்ற நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், வேலைக்கு செல்வோர் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் மட்டும் ஏன் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து டெல்லி அரசாங்கம் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளிகளை திறக்க இன்று முதல் மீண்டும் தடை விதித்துள்ளது.