அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% லிருந்து 28% ஆக உயர்வு..!
குஜராத் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17% லிருந்து 28% ஆக உயர்த்தியுள்ளது.
குஜராத் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 11 சதவிகிதம் உயர்த்த குஜராத் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு அடிப்படையில் 17 சதவீதமாக அகவிலைப்படி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
குஜராத் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மத்திய அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கியதற்கு இணையாக உள்ளது. இந்த மத்திய அரசு ஜூலை மாதத்தில், ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தியது.
நாங்கள் வழக்கமாக மத்திய அரசின் அகவிலைப்படியை பின்பற்றி, அதற்கேற்ப திருத்தங்களைச் செய்வதால், அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டது என குஜராத் அரசு தெரிவித்தது. இந்த நடவடிக்கை மாநில அரசின் கீழ் பணிபுரியும் 9.61 லட்ச ஊழியர்களும், 7-வது ஊதியக்குழுவின் கீழ் உள்ள 4.5 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு 1.1.2022 முதல் வழங்கப்படும் என்று சட்டசபையில் இன்று முதல்வர் அறிவித்தார். தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியருக்கான அகவிலைப்படி உயர்வு கடந்த 2020 ஏப்ரலில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.