வருமான வரித்துறை சோதனை – பிபிசி ட்வீட்
இந்த நிலைமை விரைவில் சரி செய்யப்படும் என நம்புகிறோம் என பிபிசி ட்வீட்
வருமான வரித்துறை சோதனை:
டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிபிசி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் செல்போனை பறிமுதல் செய்து சோதனை அதிகாரிகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. காலை 11.30 மணி முதல் பிபிசி அலுவலகத்தில் வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
பிபிசியின் ஆவணப்படம்:
இதனிடையே, 2002 குஜராத் கலவரம் குறித்து பிபிசி, ஆவணப்படம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில், 2002 குஜராத் வகுப்பு கலவரத்தை தடுக்க அப்போதைய முதலமைச்சர் மோடி தவறிவிட்டதாக பிபிசி ஆவணம் படம் குற்றம் சாட்டியிருந்தது. குஜராத் கலவரத்தில் மோடி பங்கு குறித்து பல கேள்விகளை ஆவணப்படம் எழுப்பியிருந்ததால் பாஜக எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை:
பாஜகவின் எதிர்ப்பை தொடர்ந்து பிபிசி-யின் ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. மத்திய அரசின் தடையை மீறி நாட்டில் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பிபிசியின் ஆவணப்படத்தை திரையிட்டனர். எனினும், ஆவணப்படத்தின் முதல் பகுதிக்கு பாஜக அரசு தடை விதித்த சில நாட்களிலேயே இரண்டாம் பகுதியை வெளியிட்டது பிபிசி. மறுபக்கம், ஆவணப்படம் தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மனு மெது பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது உச்சநீதிமன்றம்.
காங்கிரஸ் கண்டனம்:
இந்த சமயத்தில் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது. அதாவது, மத்திய அரசுக்கு எதிராக செயல்பட்டால், வருமான வரித்துறையை ஏவி விட்டு பயம் காட்டுகிறது என பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிபிசியின் அலுவலகங்களில் நடந்த ஐடி ரெய்டு விரக்தியை தருகிறது. மோடி அரசாங்கம் விமர்சனங்களுக்கு பயப்படுவதை காட்டுகிறது. இந்த மிரட்டல் தந்திரங்களை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிபிசி ட்வீட்:
இதனிடையே, பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வரும்போது, பிபிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளது. அதில், வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம், இந்த நிலைமை விரைவில் சரி செய்யப்படும் என நம்புகிறோம் என்று பதிவிடப்பட்டுள்ளது.
The Income Tax Authorities are currently at the BBC offices in New Delhi and Mumbai and we are fully cooperating.
We hope to have this situation resolved as soon as possible.
— BBC News Press Team (@BBCNewsPR) February 14, 2023