வருமான வரி செலுத்துவோர் அடல் ஓய்வூதிய திட்டத்தில் சேர முடியாது – மத்திய அரசு
அடல் ஓய்வூதிய திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் இணைய முடியாது என நிதியமைச்சகம் அறிவிப்பு.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடல் ஓய்வூதிய (Atal Pension Yojana) திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் இணைய முடியாது என்று மத்திய அரசு புதிய விதியை அறிவித்துள்ளது. இந்த புதிய விதி அக்டோபர் 1-ஆம் தேதி அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அடல் ஓய்வூதிய திட்டத்தில் 18 முதல் 40 வயது வரை யார் வேண்டுமானாலும் சேர அனுமதிக்கப்பட்டன.
அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இதில் வரி செலுத்துவோர் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு பிறகு இணைந்தால் அவர்களது கணக்கு முடிக்கப்பட்டு, பணம் திரும்ப வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன் கருதியே இருந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
அடல் ஓய்வூதிய யோஜனா திட்டம் 2015 இல் தொடங்கப்பட்டது, இது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நிர்வகிக்கப்படுகிறது. இது 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உருவாக்கப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையின் அடிப்படையில் பங்களிப்புகள் வேறுபடுகின்றன. சந்தாதாரர்கள் 60 வயதில் உத்தரவாதமான குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெறுவார்கள். இந்த நிலையில், அக்டோபர் 1 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் சேரத் தகுதியற்றவர் என்று கூறப்பட்டுள்ளது.