இடைவிடாமல் பெய்த மழையால் மும்பையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்.!
மும்பையில் பெய்து வரும் தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் மும்பை மாநகரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அது மட்டுமின்றி சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய பேரிடர் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். தொடர் கனமழையால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வெள்ளம் சூழந்ததால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து மருத்துவமனையில் உள்ள வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதே போன்று பைகுலா என்ற பகுதியில் மழை வெள்ளத்தில் 300 பணியாளர்களை ஏற்றி சென்ற ரயில் சிக்கி கொண்டதை அடுத்து, அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
இதற்கிடையே மக்களை வெளியே செல்ல கூடாது என்றும், வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படியும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் மும்பை நகரில் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசி வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மும்பை முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த மோடி அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கூறியுள்ளார்.