நாளை பதவியேற்பு விழா! கர்நாடக அமைச்சரவையில் தினேஷ் குண்டு ராவிற்கு இடமா?

Dinesh Gundu Rao

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வாய்ப்பு.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றி வரலாற்றை எழுதியுள்ளது.

இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பின்னர் கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். பெங்களூர் கன்டீரவா மைதானத்தில் நாளை மதியம் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கர்நாடகா முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் நாளை பதவியேற்க உள்ளனர். மேலும், கர்நாடக மாநிலத்தில் அமையவுள்ள அரசின் அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக சித்தாந்தம் கொண்ட கட்சி தலைவர்களை அழைத்து, மிகப்பெரிய அளவில் பதவியேற்பு விழாவை நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று பெங்களூரு புறப்படுகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவிற்கு நாளைய கர்நாடக அமைச்சர் அவையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மேலிட பொறுப்பாளரான தினேஷ் குண்டு ராவ் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்.

சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகிய இருவரும் தங்களின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாகவும், முக்கிய துறைகளை பெற்று கொடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், சில முக்கிய தலைவர்களும் நாளை பதவியேற்பு விழாவில் அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்