7 ரவுண்டு.., சீறிய தோட்டாக்கள்..! மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு.!
கொல்கத்தா : வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவ கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு, தற்போது வரையில் கொல்கத்தாவில் பல்வேறு வழியில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று மாணவர் அமைப்பினர் கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டு முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். அதனை போலீசார் தடுத்தி நிறுத்தினர். மாணவர்கள் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வங்கதேசம் முழுக்க முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு விடுத்து பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
இபப்டியான சமயத்தில் பாஜக நிர்வாகி மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக தலைவர் அர்ஜுன் சிங் வீட்டிற்கு பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே தனது காரில் சென்று கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பிரியாங்கு பாண்டே PTI செய்தியாளர்களிடம் கூறுகையில், ” அர்ஜுன் சிங் வீட்டிற்கு இன்று காலை 8.15 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு பகுதியில் சுமார் 50-60 பேர் எனது காரை வழிமறித்தனர். காரை நோக்கி சிலர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். சுமார் 7,8 முறை சுட்டனர். மேலும் வெடிகுண்டுகளும் வீசப்பட்டன.
இந்த துப்பாக்கிச்சூட்டில் எனது கார் ஓட்டுநர், காரில் பயணித்த பாஜக நிர்வாகி என இருவரும் படுகாயமடைந்து கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நிகழ்த்தியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தான் ” என பிரியாங்கு பாண்டே கூறினார்.
அடுத்ததாக, அப்பகுதி பாஜக தலைவர் அர்ஜுன் சிங் கூறுகையில், “இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பின்னால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தருண் சவு மற்றும் எம்எல்ஏ சோம்நாத் ஷியாம் ஆகியோர் உள்ளனர்” என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
பாஜக பிரமுகர் பிரியாங்கு பாண்டே கார் மீதான இத்தகைய துப்பாக்கிச்சூடு தாக்குதல் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.