உ.பி இடைத்தேர்தலில் இஸ்லாமியர்கள் வாக்களிக்க இடையூறு? 7 போலீசார் சஸ்பெண்ட்!
முசாபர்நகர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை (இஸ்லாமியர்கள்) வாக்களிக்க விடாமல் தடுத்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டில் 7 காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோ : இன்று மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலும், ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் 2ஆம் கட்ட வாக்குப்பதிவும் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்களும் நடைபெற்று வருகிறது.
உத்திர பிரதேச மாநிலத்தில், காஜியாபாத், கதேஹாரி, கெய்ர், குந்தர்கி, கர்ஹால், மஜவான், மீராபூர், புல்பூர் மற்றும் சிசாமாவ் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் காலை 7 மணி முதல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற இடைத்தேர்தலில் காவல்துறையினர் வாக்காளரிகளிடம் அத்துமீறி வாக்காளர் அடையாள அட்டைகளை சரிபார்த்து வருகின்றனர். காவல்துறையினர் வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்க்க அதிகாரம் இல்லை. மேலும், குறிப்பிட்ட (இஸ்லாமிய) வாக்காளர்களை வாக்களிக்க சில இடங்களில் காவல்துறையினர் அனுமதிப்பதில்லை என்ற புகாரை மாநில எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர் .
இந்த புகாரை அடுத்து, முசாபர்நகர் மாவட்டத்தில் மீராப்பூரில் தேர்தல் பணிகளை மேற்கொண்ட 7 காவல்துறையினரை தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. பின்னர், குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் நேரடியாக சென்று மக்கள் வாக்களிக்க வர வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செயலிலும் ஈடுபட்டனர். இதனை சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சமூகத்தினர் (இஸ்லாமியர்கள்) வாக்களிப்பதை யாரும் தடுக்கவில்லை. பர்தா அணிந்தவர்களை தேர்தல் அதிகாரிகள் முறையாக சோதனை செய்வதில்லை. சில ஆண்கள் பர்தா அணிந்து சட்டவிரோதமாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறி வாக்காளர்களை முறையாக சோதனை செய்ய வேண்டும் என அப்பகுதி பாஜக தரப்பில் தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.