குறைகிறதா செல்போன் விலை.? அதிரடியாய் குறைக்கப்பட்ட சுங்க வரி.!
டெல்லி: இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024-இல் செல்போன் மற்றும் அதன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (ஜூலை 23) மத்திய பட்ஜெட் 2024-ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய வரிச்சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அதில் மிக முக்கியமாக செல்போன், சார்ஜர் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டு இருந்த 20 சதவீத சுங்க வாரியானது 15 சதவீதமாக குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், கடந்த 6 ஆண்டுகளில் செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் உள்நாட்டு உற்பத்தியில் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுளது. அதேபோல, மொபைல் போன்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் அதனை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கில், நுகர்வோர் நலன் கருதி, அடிப்படை சுங்க வரியை குறைக்க முன்மொழிகிறேன் என்றும் மின் தேக்கிகளை தயாரிக்க ஆக்ஸிஜன் இல்லாத தாமிரத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு BCD ஐ அகற்றவும் நான் முன்மொழிகிறேன் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.