பிரேத பரிசோதனையில் பலாத்காரம் இல்லை என அறிக்கை… இது யாரை காக்க என உறவினர்கள் போராட்டம்…
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராசில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என்றும், உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்றும், அந்த பெண்ணின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதவராக, ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராசில், 19 வயது தலித் பெண், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் தாக்கப்பட்டதில் படுகாயம் அடைந்த அந்த பெண், சமீபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்படாமல், இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, சமீபத்தில் வெளியிடப்பட்ட பிரேதப் பரிசோதனையில், ‘அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை’ என, குறிப்பிடப்பட்டுள்ளது. இது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில், உத்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினர் ,இந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையை முன்வைத்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரும் பூதாகரமாக மாறியுள்ளது.