சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்… பிரதமர் மோடி உருக்கம்.!
மகாராஷ்டிரா : பால்கரில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது குறித்து தான் மன்னிப்பு கேட்டுகொள்கொள்வதாக குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் தேதி தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு, மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை நிறுவப்பட்டது. இந்தச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த சிலையானது, கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி (திங்கள்) அப்பகுதியில் அடித்த பலத்த காற்றின் காரணமாக உடைந்து விழுந்தது. கடந்தாண்டு நிறுவப்பட்ட சிலை கடற்கரை காற்றின் வேகம் தாளாமல் விழுந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது.
‘ இந்த சிலை மாநில அரசின் மேற்பார்வையில் நிறுவப்படவில்லை. இந்திய கடற்படையின் மேற்பார்வையில் இச்சிலை நிறுவப்பட்டதாகும். இதே போன்ற சிலை மாநில அரசு சார்பில் நிறுவப்படும். ‘என மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மகாராஷ்டிரா வந்துள்ள பிரதமர் மோடி, விழா மேடையில் பேச ஆரம்பிக்கும் போதே, ” நான் மகாராஷ்டிரா வந்திறங்கியவுடன், சத்ரபதி சிவா சிலை உடைந்தது குறித்து அறிந்துகொண்டேன்.
இந்த சிலை உடைந்தது தொடர்பாக சத்ரபதி சிவாஜியிடம் முதலில் நான் மன்னிப்பு கேட்டுகொள்கிறேன். மேலும், சிலை சேதத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.
மேலும், ” சத்ரபதி சிவாஜி மகாராஜாவை தங்கள் தெய்வமாகக் கருதி வருபவர்கள், சிலை உடைந்தது பற்றி அறிந்து மனதளவில் மிகவும் புண்பட்டவர்களிடத்தில் நான் தலை வணங்கி அவர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் மதிப்பது இங்கு வேறு. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை” என பரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.