இனி கன்னடர்களுக்கு மட்டுமே கர்நாடகாவில் வேலைவாய்ப்பு.? முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்.!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் உள்ள C,D கிரேடு பணிகளில் உள்ள வேலைவாய்ப்புகள் கர்நாடகாவை சேர்த்தவர்களுக்கே கிடைக்க வேண்டும் எனும் வகையில் புதிய மசோதாவை அம்மாநில அரசு கொண்டுவந்துள்ளது.
இந்த மசோதா குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிடுகையில், கர்நாடகாவில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவும், வேலையின்மையை குறைக்கும் நோக்கிலும் புதிய மசோதாவுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் உள்ள சி,டி கிரேடு பணிகளில் 100 சதவீத கன்னடர்களை கட்டாயமாக பணி அமர்த்துவது தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும், கன்னட தேசத்தில் (கர்நாடகாவில்) இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை குறைத்து கன்னடர்களின் நலனைக் காப்பதே எங்கள் அரசின் முன்னுரிமை என அம்மாநில முதல்வர் சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
சி கிரேடு வேலை என்பது கிளார்க், அலுவலக உதவியாளர், தட்டச்சாளர், டெலிபோன் ஆப்பரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்ற பணிகள் ஆகும்.
அதே போல டி கிரேடு வேலை என்பது சமையல் பணியாளர், காவல் பணியாளர் (வாட்ச்மேன்), தோட்ட பணியாளர், தூய்மை பணியாளர் போன்ற உடல் உழைப்புகொண்ட வேலைகள் ஆகும்.