அடித்து நொறுக்கப்பட்ட வாக்கு இயந்திரங்கள்.. ஆந்திரா தேர்தலில் பரபரப்பு.!
Election2024 : ஆந்திர மாநிலத்தில் சித்தூர் வாக்குச்சாவடியில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாக்கு இயந்திரங்கள் உடைக்கப்பட்டன.
இன்று (மே 13) 4ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 9 மாநிலங்கள் 1 யூனியன் பிரதேசம் உட்பட 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அங்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக, ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் தெலுங்கு தேசம் கட்சிக்குமான மோதல் போக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இன்று வாக்குப்பதிவு நாளன்று ஒருசில பகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. சித்தூர் தொகுதி பல்நாடு மாவட்டம் ரெண்டல கிராமத்தில் உள்ள வாக்குசாவடியில் இரு கட்சி பிரமுகர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் வாக்கு இயந்திரங்கள் அடித்துநொறுக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் இரு கட்சியினருக்கும் ஏற்பட்ட அடிதடி தகராறில் இரு தரப்பினருக்கும் காயங்கள் எப்பட்டன இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதே போல, காடப்பா, அனந்தபூர் தொகுதி வாக்குச்சாவடிகளிலும் பதற்றமான சூழல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.