IMPS பரிவர்த்தனை வரம்பை ரூ. 5 லட்சமாக உயர்த்திய ஆர்.பி.ஐ..!
இனி IMPS மூலம் ரூ.2 லட்சம் பதில் ரூ .5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது இரு மாத பணக் கொள்கை மறுஆய்வு அறிக்கையை இன்று தாக்கல் செய்தது. அதில் வங்கி ரெப்போ விகிதம் மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனை மாற்ற ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் நாட்டிற்கு எல்லா வகையிலும் பெரிய நெருக்கடி கொடுத்துள்ள நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மீட்புக்கு அவசியம். மக்கள் வீட்டிலேயே தங்கி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டும்.
டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற மொபைல் செயலிகளை இதற்குப் பயன்படுத்தலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்து பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்தார். இதைக் கருத்தில் கொண்டு, IMPS பரிவர்த்தனை செய்வதில் மிகப்பெரிய அறிவிப்பை ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதன்படி, உடனடி கட்டண சேவை (IMPS) மூலம் பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.
இப்போது வாடிக்கையாளர்கள் IMPS மூலம் ஒரு நாளில் ரூ.5 லட்சம் பரிவர்த்தனைகளை செய்யலாம். முன்பு IMPS மூலம் ரூ .2 லட்சம் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் ஆனால் இப்போது ரூ.5 லட்சம் வரை பரிவர்த்தனை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீங்கள் ஆன்லைனில் அதிக அளவில் பரிவர்த்தனை செய்ய எளிதாகிவிட்டது.