பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், வைரம் விலை குறையும்..!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு ஆண்டும் போலவே 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 9 வரை நடைபெறும். இது தற்போதைய அரசின் கடைசி பட்ஜெட் ஆகும்.
இன்னும் சில நாட்களில் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளது. இந்நிலையில், தங்கம் மற்றும் வைரம் மீதான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக உள்ளது. அதை 4 சதவீதமாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வைரங்கள் மீதான இறக்குமதி வரியை 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கும் திட்டத்தை வரும் மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜிஜேஇபிசி தலைவர் விபுல் ஷா கூறினார். வெட்டப்பட்ட மற்றும் பளபளப்பான கற்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிக்கப்பட்டால் ஏற்றுமதி குறையும் என்று கூறப்படுகிறது.இதனால் நகை தொழிலில் வேலை வாய்ப்பு குறையும் என கவலை தெரிவித்தார்.
GJEPC தலைவர் விபுல் ஷா கூறுகையில், தங்களது கோரிக்கையை நிறைவேற்றினால், துபாய், பெல்ஜியம் போன்று இந்தியாவும் வர்த்தக மையமாக மாறும் என்றார். மேலும் நமது வைர வியாபாரிகள் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார். மத்திய பட்ஜெட்டில் ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் தங்கம், வைரம் விலை பெருமளவு குறையும் எனத் தெரிகிறது.