நான் உயிருடன் திரும்பி இருக்கிறேன்; உங்கள் முதல்வருக்கு நன்றி- பிரதமர் மோடி ..?

நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன். உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பிரதமர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக இன்று பஞ்சாப் வந்த பிரதமர். விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை கரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார்.
அப்போது, பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் ஏராளமான போராட்டக்காரர்கள் சாலையை மறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமரின் வாகனம் நின்றது. இதைத்தொடந்து, பிரதமரின் வருகை, திட்டம் குறித்து பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பஞ்சாப் காவல்துறை மேற்கொள்ளாததால் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகவும், பாதுகாப்பு குறைபாடு குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
உடனடியாக பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திற்கே திரும்பிச்சென்றார். விமான நிலையம் சென்ற பிரதமர், நான் விமான நிலையத்திற்கு உயிருடன் திரும்பி இருக்கிறேன். உங்கள் முதல்வருக்கு அதற்காக நான் நன்றி சொன்னேன் என சொல்லிவிடுங்கள் என பத்திண்டா விமான நிலையத்தில் இருந்த பஞ்சாப் அதிகாரிகளிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.