“ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” நாடாளுமன்றத்தில் பாராட்டு மழையில் இளையராஜா!
லண்டலில் முதல் இந்தியராக தனது சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜாவுக்கு மாநிலங்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34 நாட்களில் வேலியன்ட் எனும் தனது முதல் சிம்பொனி இசையை குறிப்பெழுதி அதனை லண்டனில் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்ட்ரா இசைக்குழுவுடன் இணைந்து தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்தியாவிலே முதல் நபராக சிம்பொனி இசையை அரங்கேற்றும் இசை கலைஞர் எனும் பெயர் பெற்றார் இசைஞானி இளையராஜா.
சிம்பொனி இசையை அரங்கேற்றிய இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா 2022 முதல் மாநிலங்களவை எம்பியாகவும் உள்ளார்.
மாநிலங்களவையில்..,
பட்ஜெட் விவாதம் மீதான நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று மாநிலங்களவில் இளையராஜாவுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவைக்கு சென்றிருந்த இளையராஜாவுக்கு, அவையில் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் பாராட்டி பேசினார். அவர் பேசுகையில், ” இந்த அவை இளையராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறது. அவர் ஒரு லெஜெண்ட் இசையமைப்பாளர்.கடந்த 4,5 தசாப்தாங்களாக இசையமைத்து வருகிறார்.
அனைவராலும் ‘இசைஞானி’ என அழைக்கப்படுகிறார். அவரது இசை எல்லைகளை கடந்து அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இதுவரை 8,600 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். உலகத்திலேயே 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்த ஒரே ஆள் இவர்தான். இளையராஜா 9 மொழிகளில் இசையமைத்துள்ளார்.
விருதுகள் :
இளையராஜா இனி யாரும் நெருங்கமுடியாத பல சாதனைகளை அவர் படைத்தது வருகிறார். இதுவரை 5 தேசிய விருதுகளை வென்றுள்ளார். அதில் 3 பாடல்களுக்கு பெற்றுள்ளார். 2 பின்னணி இசைக்காக பெற்றுள்ளார். கிளாசிக்கல் கிதார் கலையில் தங்க பதக்கம் வாங்கியுள்ளார். லண்டனில் இந்திய இசையை உலக அரங்கிற்கு எடுத்து சென்றுள்ளார். 2010-ல் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. 2018-ல் அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
உங்களால் நாடே பெருமை கொள்கிறது
முதல் இந்தியராக இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை எழுதி நேரடியாக கம்போஸ் (ஒருங்கிணைத்து) அதனை பதிவு செய்து வேலியண்ட் எனும் இசையை வடிவமைத்துள்ளார். இந்த சிம்பொனி இசையை வெறும் 34 நாட்களில் எழுதி இசையமைத்துள்ளார். உங்களால் நாடே பெருமை கொள்கிறது. உலக அரங்கில் தலைநிமிர செய்த இளையராஜாவுக்கு பிரதமர் மோடி ஆட்சியில் கடந்த 2022 ஜூலை மாதம் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டது. இளையராஜாவின் இந்த இசை பயணம் தொடரட்டும். அவரது மெலடி இன்னும் வரப்போகும் தலைமுறை கடந்து நிலைத்திருக்கும் என பாராட்டினார் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர்.