பணமிருந்தால் இந்திய தேர்வுமுறையை வாங்கிவிடலாம் – ராகுல் காந்தி
டெல்லி : இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, நீட் தேர்வு விவாதத்தில் காட்டமாக பேசி இருந்தார்.
மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன் முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டமானது நடைபெற்றது.
மேலும், இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடரில் நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் செய்யப்பட்டது, அதில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியும் பேசி இருந்தார்.
அவர் பேசுகையில், “நீட் தேர்வு முறையில் பல சிக்கல்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பணம் இருப்பவர்களால் இந்திய தேர்வு முறையை விலைக்கு வாங்க முடியும். அமைப்பு ரீதியாக சிக்கல்கள் உள்ள நீட் தேர்வு முறையை எப்படி சரி செய்யப்போகிறீர்கள்?. மத்திய அமைச்சரோ, தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குறைசொல்கிறார்.
தேர்வு முறைகேடு விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே அவருக்குப் புரிகிறதா என தெரியவில்லை. இந்தியத் தேர்வு முறை ஒரு மோசடி என்று உறுதியாக நம்பும் லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டில் உள்ளனர் என்பது தான் பிரச்சினை”, என எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பேசி இருந்தார்.