எங்கள் சென்டரில் படிக்கவில்லையெனில் எதிர்காலம் பாழாகிவிடும்! பெற்றோர்களை மிரட்டும் பைஜூ’ஸ்.!
குழந்தைகளிடம் மொபைல் எண்களை வாங்கி பெற்றோர்களை, பைஜூ’ஸ் மிரட்டுவதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பிரபல ஆன்லைன் கற்றல் தளமான பைஜூ’ஸ், அதன் வாடிக்கையாளர்களை அதிகரிக்க குழந்தைகளின் பெற்றோர்களை மிரட்டி வருவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தெரிவித்துள்ளது. இது குறித்து ஆணையத்தின் தலைவர் கூறியதாவது, பைஜூ’ஸ் நிறுவனமானது ஆரம்ப நிலை கற்கும் குழந்தைகளை குறி வைக்கின்றனர்.
மேலும் குழந்தைகளிடம் அவர்களின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வாங்கி, எங்கள் கற்றல் தளத்தில் குழந்தைகளை சேர்ந்து படிக்கவைக்குமாறும், இல்லையெனில் அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என்று மிரட்டுகிறார்கள்.
இது குறித்து வந்த பல பெற்றோர்களின் புகார்களின் அடிப்படையில் விசாரித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பைஜூ’ஸ் சி.இ.ஓ ரவீந்திரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது, என்று ஆணையத்தின் தலைவர் கூறினார். மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளை தவறாக விற்பதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக டிசம்பர் 23 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இந்த பைஜூ’ஸ் விற்பனை குழுவானது, பெற்றோர்களிடம் தங்களது பாடப்பிரிவுகளை விற்க, கடன் அடிப்படையிலான பாட ஒப்பந்தங்களில் சேர வாடிக்கையாளர்களை தீவிரமாக ஏமாற்றி வருவதாகவும், பைஜூ’ஸ் குறித்து புகார் வந்துள்ளதாகவும் ஆணையம் தெரிவித்தது.
இந்த விவகாரம் தொடர்பான முரண்பாடுகள் குறித்து விளக்கமளிக்க ரவீந்திரனை நேரில் ஆஜராக ஆணையம் கேட்டுக் கொண்டது. ரவீந்திரன், இந்த உத்தரவை மீறினால் பின் விளைவுகளுக்கு அவர் உட்படுத்தப்படுவார் என்றும் ஆணையம் மேலும் கூறியது.